கனவு வீடு

சிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய விசாலமான வீடுகளின் உள்ளறைகளில் யாரெல்லாம் வசிப்பார்கள் என்று, அந்த வழிகளால் கடைதெருவுக்குப் போகும்போது யோசித்துக்கொண்டே போவேன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறவர்களின் வீடுகளும் பாடசாலைகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பன. தோழர்களும்கூட.
அதற்கிணங்க, அப்பா வேலை இடமாற்றம் பெற்றுப் போகும் இடங்களுக்கு எங்களது பாடசாலையும் வீடும் பெயர்ந்துகொண்டே இருந்தன. அந்தப் புதிய [...]